
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளின் நலம் விசாரிப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) பிற்பகல் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.
வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர், காயமடைந்துள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் மீது, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நபர் 2016 ஆம் ஆண்டு நாரம்மல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரையும் அங்கு உதவியாளராக இருந்தவரையும் தாக்கி, கட்டிவைத்து, அங்குள்ள தூபியை சேதப்படுத்திய குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது.நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் சந்தேகநபர்கள் என 2,400-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இன்று (07) காலை நிலவரப்படி, இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்





