அரசியல்இலங்கை

கோட்டாபய கைது செய்யப்படுவாரா?

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் திங்கட்கிழமை (06)  கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மூன்றாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் கூறியதாவது: “மனுதாரர் தான் ஆசாத் மௌலானா என்ற நபரை அறியவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சான்றுகள் அவர்கள் இருவரும் சந்தித்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள ‘இனியாபாரதி’ என்பவர் அளித்த வாக்குமூலத்தில், 2019-ல் ஹெந்தவிதாரண என்பவர் தன்னை அழைத்து, கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்குமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, மிரிஹானையில் உள்ள கோட்டாபயவின் இல்லத்திற்குச் சென்றபோது, அங்கே ஆசாத் மௌலானாவையும் தான் கண்டதாக அவர் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.”

இதனையடுத்து, மனுதாரர் எழுப்பும் விடயங்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை என்றும், அரசியலமைப்பின் 126-வது பிரிவின்படி, அவற்றை விசாரித்து தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதிடுகையில், “ஒருவர் கைது செய்யப்படுவதற்கு வலுவான ஆதாரங்களும், நியாயமான சந்தேகமும் அவசியம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழு அறிக்கையிலும் மனுதாரர் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆசாத் மௌலானா சேனல் 4 ஊடகத்திற்கு அளித்த பேட்டியை தொடர்ந்து அமைக்கப்பட்ட இமாம் ஆணைக்குழு அறிக்கையிலும் மனுதாரர் தொடர்பில் எந்தக் குறிப்பும் இல்லை. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக ஒருவரை தன்னிச்சையாக கைது செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும், புகைப்படங்கள் குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த சட்டத்தரணி, “மனுதாரர் அரசியல் நடவடிக்கைகளின் போது கர்தினால், டக்ளஸ் தேவானந்தா, சம்பந்தன் மற்றும் பிரபா கணேசன் போன்ற பலரைச் சந்தித்துள்ளார். அதேபோல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆசாத் மௌலானாவும் இருப்பதாலேயே அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூற முடியாது” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மேலதிக வாதங்களுக்காக வழக்கை வரும் ஜூலை 9-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button