இலங்கைதமிழீழம்தமிழ்

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி மட்டு. வீதியில் இறங்கிய உறவுகள்!

தமிழீழம் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குறிப்பாக போர்க் காலத்தில் கடத்தப்பட்டு, சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை தொடர்பான உண்மை நிலையை  வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் உறவிகளால் மட்டக்களப்பில் இன்று (04) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்  சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை ஏந்தியவாறு, அவர்களின் நிலை தொடர்பான உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது, காணாமல் போனோர் தொடர்பான உள்ளக நீதிமுறைகள் மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக மட்டுமே நீதி கிடைக்கும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ. அமலநாயகி, பல்வேறு ஆணைக்குழுக்களிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் மரணச் சான்றிதழ்கள் அல்லது இழப்பீடுகள் தங்களது கோரிக்கைக்கு தீர்வாக அமையாது என்றும், தங்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த பல வருடங்களாக வடக்கு கிழக்கில் உறவுகளை தேடி தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button