
இவ்வாறான பிரதான நிலையங்களை, வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மற்றும் காணி விடுவிப்பு
ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பற்றைக்காடுகளாகக் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத அக்காணிகளைத் துப்புரவு செய்து, மக்களுக்கே வழங்கும் சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணம் நகரிலுள்ள அன்னசத்திர வீதியை ரயில்வே திணைக்களம் மூடியுள்ளமைக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியை ஆளுநரும், அமைச்சர் இ.சந்திரசேகரும் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னரே காணிகள் மற்றும் வீதிகள் விடுவிப்புத் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ரயில் பாதைகள் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறுக்கறுக்கும் வீதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிரதான வீதிகளுடன் இணைக்கும் சமாந்தர வீதிகளை அமைப்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழிமுறை என ரயில்வே பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
மாவட்ட ரீதியான முக்கிய கோரிக்கைகள்
‘டிட்வா’ பேரிடரால் சேதமடைந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை, மடுத் திருவிழாவுக்கு முன்னதாக மீள ஆரம்பிப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொது முகாமையாளர் உறுதியளித்தார்.
மூடப்பட்ட ரயில் கடவைகளால் மக்கள் பல கிலோமீற்றர்கள் சுற்றிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது குறித்துக் கள ஆய்வு செய்து சில கடவைகளை விடுவிக்கவும், ஏனையவற்றிற்கு மாற்று வீதிகளை அமைக்கவும் ரயில்வே திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தின் ஒரேயொரு ரயில் நிலையமான மாங்குளத்தில் அனைத்து ரயில்களும் நிற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், அங்கு பன்முகப் போக்குவரத்து மையமொன்றை அமைப்பதன் ஊடாக தற்போதைய காணி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்: பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், இலங்கை ரயில்வே திணைக்களப் பணிப்பாளர், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள், யாழ்ப்பாணம் உதவி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கைச் செயலணியின் இயக்குநர், வவுனியா மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உயர் அதிகாரிகள், ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்





