
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை ஜூலை மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணி வாசுகி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
.சென்னை பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜய், “தன்னுடைய கட்சியின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பெற்றோருக்குக் குழந்தைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்
இது குழந்தைகள் மீது செல்வாக்குச் செலுத்தும் செயல் எனவும், இவ்விடயம் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முன்னிலையான ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் எஸ். முரளிதர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆகியோர் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரினர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை ஜூலை 1 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.





