
உலகின் மிகவும் தொலைதூரமான மனிதர்கள் வாழும் தீவான டிரிஸ்டன் டா குன்ஹா தீவில், ஹான்டாவைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரித்தானிய இராணுவத்தின் பாராசூட் வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் வான்வழியாகக் குதித்து அவசர உதவிகளை வழங்கியுள்ளனர்.
இதன்படி, பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக, மனிதாபிமான உதவி மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இராணுவ மருத்துவக் குழுவினர் பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்டுள்ளனர்
16 வான்வழித் தாக்குதல் படையை சேர்ந்த 6 பாராசூட் வீரர்கள் மற்றும் 2 இராணுவ மருத்துவர்கள் இந்த சவாலான பணியில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட RAF A400M ரக வானூர்தி, அசென்ஷன் தீவு வழியாக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்த இலக்கை அடைந்தது.
நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியுடன் இந்த நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 13 முதல் 15 வரை இந்தத் தீவில் நங்கூரமிட்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ஹான்டாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரித்தானிய நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த தீவில் ஒக்ஸிஜன் கையிருப்பு மிகவும் குறைந்த மட்டத்தை எட்டியதால், இந்த அவசர உதவி அவசியமானது.
சுமார் 200 பேர் மட்டுமே வாழும் இந்தத் தீவில் வானூர்தி ஓடுதளம் கிடையாது.
பொதுவாக கப்பல் மூலமே இங்கு செல்ல முடியும் என்ற நிலையில், நோயாளியின் உயிரைக் காக்க வான்வழி விநியோகம் மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
ஒக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் சனிக்கிழமை அன்று பாராசூட் மூலம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டன.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை தீவு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





