இலங்கை

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அரசாங்க புலமைப்பரிசில் திட்டம் : மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கல்வி அமைச்சின் அவசர எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 200 மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக சில அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மாணவர்களையும் பெற்றோர்களையும் தவறாக வழிநடத்துவதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

 

 

2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, க.பொ.த (உயர் தர) பரீட்சையில் அதிவிசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

க.பொ.த (உயர் தர) பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் 200 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்படுவர். இத்திட்டம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் மாத்திரமே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.

 

2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

இந்த அரசாங்க புலமைப்பரிசில் திட்டத்துடன் தமக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு, பல்வேறு அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்களும் பிரதிநிதிகளும் மாணவர்களையும் பெற்றோர்களையும் திசைதிருப்புவதாக அமைச்சு அவதானித்துள்ளது.

 

இது தொடர்பாகப் பொதுமக்கள் பின்வரும் விடயங்களைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

எந்தவொரு தனியார் நிறுவனம், ஆலோசனை சேவை அல்லது பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சு எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

 

 

 

 

அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, விண்ணப்பங்களைத் தயாரிக்கவோ அல்லது மாணவர்களைத் தெரிவு செய்யும் விடயத்தில் செல்வாக்கு செலுத்தவோ எந்தவொரு தனியார் தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

 

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் மதிப்பீடு செய்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அமைச்சினால் நேரடித் தெரிவுப் போட்டியின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும்.

 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க எந்தவொரு பிரதிநிதியினதோ அல்லது இடைத்தரகர்களினதோ உதவியைப் பெறத் தேவையில்லை.

 

அங்கீகரிக்கப்படாத தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகளுக்கு அமைச்சு எவ்வித பொறுப்பையும் ஏற்காது.

 

அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் நம்புமாறு மாணவர்களும் பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறான தகவல்களைப் பரப்புவோர் அல்லது பொதுமக்களை ஏமாற்றுவோருக்கு எதிராக இலங்கை சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button