
ஈரான் மற்றும் ஓமனுக்கு இடைப்பட்ட உலகின் மிக முக்கியமான கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்க – இஸ்ரேலிய போர்ச் சூழலுக்கு மத்தியிலும் ஈரானின் நிழல் கப்பற்படை மிகவும் தந்திரமாகச் செயற்பட்டு வருவதை அல் ஜசீரா ஊடகத்தின் திறந்த மூலப் புலனாய்வு அம்பலப்படுத்தியுள்ளது.
மார்ச் 1 முதல் ஏப்ரல் 15 வரை 185 கப்பல்கள் மேற்கொண்ட 202 பயணங்களை அல் ஜசீரா கண்காணித்தது. இதில் 77 பயணங்கள் (38.5 சதவீதம்) ஈரானுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவை.
இந்த நீரிணையை கடந்த கப்பல்களில் 61 கப்பல்கள் ஏற்கனவே சர்வதேசத் தடைப் பட்டியலில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நீரிணையை கடப்பதற்காக நிலப்பரப்பால் சூழப்பட்ட போட்ஸ்வானா, சான் மரினோ மற்றும் மடகாஸ்கர், கொமோரோஸ் போன்ற நாடுகளின் போலி கொடிகளைப் பயன்படுத்தி இக்கப்பல்கள் பயணிக்கின்றன.
சர்வதேசத் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க AIS எனப்படும் தானியங்கி அடையாளக் கண்காணிப்பு கருவிகளை இக்கப்பல்கள் வேண்டுமென்றே முடக்குகின்றன
கப்பல்களின் உண்மையான உரிமையாளர்களை மறைக்க ஈரான், சீனா, கிரீஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடிப் போர் (மார்ச் 1 – ஏப்ரல் 6): இக்காலப்பகுதியில் 126 கப்பல்கள் நீரிணையைக் கடந்தன, அதில் 46 கப்பல்கள் ஈரானுடன் தொடர்புடையவை. மார்ச் 11 அன்று தாய்லாந்தின் ‘மயுரி நாரி’ கப்பல் தாக்குதலுக்குள்ளாகி 3 மாலுமிகள் உயிரிழந்தனர்.
தற்காலிக போர்நிறுத்தம் (ஏப்ரல் 7 – 13): இந்த இடைவெளியில் 49 கப்பல்கள் பயணித்தன. இதில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை ஈரானுடன் தொடர்புடையவை.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை (ஏப்ரல் 13 முதல்): ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முழுமையான கடற்படை முற்றுகையை விதித்த போதிலும், 25 கப்பல்கள் தடையை மீறி நீரிணையைக் கடந்தன. உதாரணமாக, ‘13448’ எனும் ஈரான் கப்பல் தடையை மீறி பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்றது.
போருக்கு முன்னதாக தினசரி சுமார் 100 கப்பல்கள் இந்த வழியைக் கடந்த நிலையில், தற்போது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் சுமார் 2,000 கப்பல்களில் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் நெருக்கடி இதுவென சர்வதேச கடல்சார் அமைப்பு விவரித்துள்ளது.





