
சித்திரை புத்தாண்டு தினமான இன்று (14.04.2026), பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இது குறித்துத் தெரிவிக்கையில்,
கடந்த 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட புத்தாண்டு பேருந்து சேவை இன்றும் தொடர்கிறது.
கொழும்பு பெஸ்டியன் மாவத்தை, மாக்கும்புர, கடவத்தை மற்றும் கடுவெல ஆகிய பிரதான நிலையங்களிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்குத் தேவையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று பயணிகளின் வருகை குறைவாக இருந்தபோதிலும், மக்கள் தேவைப்படும் இடங்களுக்குச் செல்வதற்காகத் தயார் நிலையில் பேருந்துகள் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க கூறுகையில்,
கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இன்று மிகக் குறைவாகக் காணப்படுவதால், சாதாரண தொடருந்து சேவைகள் சில மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், கொழும்பிலிருந்து நெடுந்தூரங்களுக்குப் பயணிக்கும் அனைத்து விரைவு தொடருந்துகள், தபால் தொடருந்துகள் மற்றும் நகரிடை விரைவு தொடருந்துகள் வழமை போல எவ்வித மாற்றமுமின்றி இயங்கும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.





