இலங்கைஉலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: இலங்கையில் எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை – கைகொடுக்குமா இந்தியா?

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட் தெரிவித்துள்ளார்.

விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதன் எதிரொலியாக இலங்கையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

 

உலக சந்தையில் ஒரு கொள்கலன் மசகு எண்ணெய் விலை 120 டொலரை நெருங்கியுள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 25 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

எரிபொருள் விலை உயர்வால் முச்சக்கர வண்டி மற்றும் பேருந்து கட்டணங்கள் உயர்ந்துள்ளன. அத்துடன் பாண் (Bread) மற்றும் பிளேன் டீ (Plain Tea) உள்ளிட்ட சாமானிய மக்களின் அத்தியாவசிய உணவுகளின் விலைகளும் சங்கிலித் தொடராக உயர்ந்து வருகின்றன.

 

உலகின் 20% எரிபொருள் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை(Strait of Hormuz) ஈரான் கிட்டத்தட்ட முடக்கியுள்ளது.

 

அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள ஓமான், சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் தமது வான்பரப்பை ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்த அனுமதித்தால், அந்தத் தளங்கள் அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

 

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சவுதி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் தமது வான்பரப்பை அமெரிக்கா பயன்படுத்த உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளன. இது ஈரானுக்குக் கிடைத்த ஒரு முக்கிய இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

 

தற்போதைய இக்கட்டான சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைச் செலுத்த இந்தியாவுக்கு மட்டும் ஈரான் விசேட அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தியாவுடனான இந்த இணக்கப்பாடு காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button