இலங்கை

அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு

அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய தினம் இடம்பெற்ற மஹாவலி நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

 

நாட்டில் அரிசி இருப்பு நிலைமை மற்றும் சந்தை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அரிசியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் உப உற்பத்திப் பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேவையான ஆய்வுகள் மற்றும் கலந்தாலோசனைகள் முடிவடைந்த பிறகு இதுகுறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், நாட்டின் சோளத் தேவையில் 50 சதவீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஏனையவை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இருப்பினும், உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான சாகுபடி நிலங்கள் இல்லாத காரணத்தினால், அதற்குப் பதிலாக அரிசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதற்காக வயல் நிலங்களை விரிவாக்க எதிர்பார்க்கவில்லை என்றும், விவசாயத் திணைக்களத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி விளைச்சலை அதிகரிக்குமாறும் அவர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 

அரசாங்கம் நெல் விலையை வர்த்தமானி மூலம் சட்டமாக்கவில்லை. தனியார் துறையினர் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதைத் தடுப்பதே எமது நோக்கம். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலையீடு போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அங்கு களஞ்சியசாலை மற்றும் பணியாளர் பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு விவசாயத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என நாம் அஞ்சினோம். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button