நான்கு வாரங்களாக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடர் தற்போது அதன் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளது.
நடப்புச் சம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளன.
இங்கிலாந்து: சுப்பர் 8 சுற்றில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியே அடையாத பலமான அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா: இத்தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியடையாத ஒரே அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது. அவர்களின் அதிரடி ஆட்டம் ஏனைய அணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்தியா: ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு தொடர்ச்சியான வெற்றிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
நியூசிலாந்து: பாகிஸ்தானை நிகர ஓட்ட விகித அடிப்படையில் பின்தள்ளி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது
முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. நாளை இரவு (04) ஏழு மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 05 ஆம் திகதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
உலகக் கிண்ணத்தின் மகுடம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 08 (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
பாகிஸ்தான் தகுதி பெற்றிருந்தால் கொழும்பில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி, தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும்.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளுக்கும் மற்றும் இறுதிப் போட்டிக்கும் மழை குறுக்கிட்டால் பயன்படுத்துவதற்காக மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரு போட்டியின் முடிவைத் தீர்மானிக்க இரு அணிகளும் தலா 10 ஓவர்களாவது விளையாடியிருக்க வேண்டும்.
அரையிறுதிப் போட்டிகளுக்கு முதல் நாளில் 90 நிமிடங்களும், மேலதிக நாளில் 120 நிமிடங்களும் மேலதிகமாக வழங்கப்படும்.
நான்கு சிறந்த அணிகள், இரண்டு அழுத்தமான அரையிறுதிகள், ஒரே ஒரு உலகக் கிண்ணம், கிண்ணத்தை வெல்லப்போவது யார் என்பதை அறிய ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.





