
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் இலங்கை வருகை மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற விடயங்களில் இலங்கை – பாகிஸ்தான் இடையே புதிய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரண்டு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
இலங்கைக்கு வருகைதந்த பாகிஸ்தானின் மத்திய உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்வி, நேற்று கொழும்பில் உள்ள பொது பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று அமைச்சர் ஆனந்த விஜயபாலவை சந்தித்தார்.
இதன்போது, காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினருக்குக் கூட்டுப் பயிற்சித் திட்டங்களைஆரம்பிக்க முன்மொழியப்பட்டது.
குறிப்பாக, பாகிஸ்தானின் தேசிய காவல்துறை கல்லூரியில் பயிற்சிகளைப் பெற இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன், வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள், எல்லை தாண்டிய நிதி மோசடிகள் மற்றும் இணையவழி குற்றக் குழுக்களைக் கையாள்வதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
மேலும் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்களை முறியடித்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுத்தல் போன்றவற்றில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இரண்டு தரப்புக்களும் இணக்கம் கண்டுள்ளன.





