இலங்கை

டி20 உலகக்கிண்ணம் 2026: கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை (7) ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி (SSC) மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது

இதற்காக 1,500 காவல்துறை அதிகாரிகளும் 600 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மைதானத்தினுள் பெரிய பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர். பிரேமதாச மைதானத்தைப் பொறுத்தவரை விண்சென்ட் பெரேரா மாவத்தை (கிராண்ட்பாஸ் வீதி) ஊடாக பபாபுள்ளே பாலச் சந்தியில் இருந்து பபாபுள்ளே பகுதிக்குள் நுழைதல் மற்றும் பபாபுள்ளே பாலத்திலிருந்து மைதானம் நோக்கி வருதல் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

 

அதேநேரம், செபஸ்டியன் கால்வாய் வீதிக்கு அருகிலுள்ள மல்வத்தை பாலம் மற்றும் 100 அடி வீதி – விகாரை வீதிச் சந்தி ஆகியவற்றின் ஊடாக மைதானம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படவுள்ளது.

 

மேலும், மைதானத்திற்கு அருகிலுள்ள மாளிகாவத்தை வீதி பக்கவாட்டு வீதி மற்றும் சத்தர்ம மாவத்தை – கெத்தாராம வீதிச் சந்தி ஊடாக விகாரை வீதிக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

 

அதேவேளை, எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் செல்லும் நுழைவு பகுதி, வித்யா மாவத்தை சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் செல்லும் நுழைவு பகுதி மற்றும் விஜேராம சந்தியிலிருந்து வித்யா மாவத்தைக்கு நுழையும் பகுதி ஆகிய இடங்களில் போக்குவரத்துத் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

அத்துடன், பெப்ரவரி 8, 15 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள விசேட போட்டிகளுக்காக பழைய பாதுகாப்பு அமைச்சு வளாகம் மற்றும் துறைமுக நகர (Port City) வாகன தரிப்பிடங்களிலிருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

அதேநேரம், ஆர். பிரேமதாச மைதானத்தில் பெப்ரவரி 11, 13, 21, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இதன்படி, மெட்டிபார்க் (Matipark) தரிப்பிடம், சதோச (Sathosa) வளாகம், செபஸ்டியன் கால்வாய் பகுதி, கோவில் வீதி, எப்பள் வத்த மற்றும் 100 அடி வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button