
மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விசேட சூழ்நிலையில் அனர்த்த முகாமைத்துவத்தின் போது ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியுள்ளதாலும், அரச அதிகாரிகள் உடனடித் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாலும், அவர்களுக்குத் தேவையான சட்டப் பின்னணியை உருவாக்குவதற்காக மாத்திரமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம்.
இது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், மக்களின் சுதந்திரத்தை முடக்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்ற சில குற்றச்சாட்டுகளை நான் கண்டேன். ஆயினும், நாம் இச்சட்டத்தினை வேறு எதற்கும் பயன்படுத்தப் போவதில்லை என்பதை கௌரவ ஜனாதிபதி அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் செயற்படுகிறோம்.
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்டுள்ள புவியியல் மாற்றங்கள் குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம். அப்பணி இன்னும் முடிவடையவில்லை. அது மாற்றம் கண்டுவரும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றும் போது, அந்த நிலத்தின் பாதுகாப்பு குறித்துப் பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே மீளக் குடியேற்ற முடியும். இப்போது தென்மேற்கு பருவமழைக் காலம் என்றாலும், இந்த மழையினால் பொதுவாக அனர்த்தங்கள் ஏற்படுவதில்லை. ஆயினும் தற்போதைய நிலையில் இந்த மழைவீழ்ச்சியும் ஓர் அனர்த்தகரமான நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே, நவம்பர் மாதப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு மிகவும் உன்னிப்பாக ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதனாலேயே அவசரகால நிலையைத் தொடர வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதே எமது முழுமையான முயற்சியாகும். எமது அரசாங்கம், அரச அதிகாரிகள், வர்த்தக சமூகம், நாட்டு மக்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ், முப்படையினர் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ளும் சக்தி எமக்குக் கிடைத்தது. இதனாலேயே உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மிக விரைவில் வழமைக்குக் கொண்டுவர முடிந்தது.
அதேபோன்று, சர்வதேச ரீதியாகக் கிடைத்த ஒத்துழைப்புடன் குறுகிய காலத்திற்குள் அனர்த்தத்தின் பாரிய தாக்கத்திலிருந்து எம்மால் மீள முடிந்தது. அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக விரைவில் சீர்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. மாற்றமடைந்து வரும் சூழல் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.





