இலங்கை

டிட்வா சூறாவளி : 643 பேர் பலி, 183 பேரைக் காணவில்லை – வலப்பனை மக்களின் உருக்கமான குற்றச்சாட்டு

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், கடந்த இரண்டு நாட்களாக உடலங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனாலேயே, இற்றைப்படுத்தப்படும் அறிக்கைகளில் எந்தவித மாற்றங்களுமின்றி, தரவுகள் உள்ளடக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன்படி, அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக தொடர்ந்தும் பதிவாகியுள்ளது. காணாமல்போன 183 பேரும் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையிலும், 731 பாதுகாப்பு முகாம்களில் 22,348 குடும்பங்களைச் சேர்ந்த 70,297 பேர் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு 18 நாட்கள் கடந்துள்ள போதிலும், அரச அதிகாரிகள் தங்களைப் பார்வையிடவில்லை என நுவரெலியா – வலப்பனை – நபட்டவல பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய நிலச்சரிவின் போது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 வீடுகள் முற்றாக மண்ணுக்குள் புதையுண்டன.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட தம்மை இதுவரை அதிகாரிகள் பார்வையிடவில்லை என வலப்பனை நபட்டவல பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியிடம் எமது செய்தி சேவை வினவியது.

இதன்போது, பதிலளித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதும், அவர்களைப் பாதுகாப்பதும் அரச அதிகாரிகளின் கடமை என குறிப்பிட்டார்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் 117 என்ற கட்டணமற்ற இலவச துரித இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்க முடியும் என பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் தனது அலுவலக இலக்கமான 0772320530 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button