
சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (4) பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் முற்பகல் நடைபெற்ற வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகத் தேவையான துல்லியமான தரவுகளைத் திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி, மண்சரிவுகளினால் 1,289 வீடுகள் முழுமையாகவும், 44,574 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் அனர்த்தங்களில் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.





