
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட மீளாய்வுக் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
சர்வதேசத்திற்கு இலங்கையைத் திறந்துவிடும் பிரதான வான் வழியாகத் திகழும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச உறவுகளில் விமான நிலையத்தின் முக்கிய பங்கினைக் குறிப்பிட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உயர் மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பயணிகள், விமானப் பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலையச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து நபர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விமான நிலையத்தின் செயற்பாடுகளைப் பேணுவதற்காக அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியதுடன், விமான நிலையத்தில் உயர் மட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதற்கு தொடர்ச்சியான ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுத்தல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு தற்போதுள்ள பதில் பொறிமுறைகளை மேம்படுத்துதல் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.





