இலங்கை

கையூட்டல், ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தமக்கு எதிரான வழக்கை இடைநிறுத்தலாம்

கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள், தமக்கு எதிரான வழக்கை, வழக்கு தீர்ப்பு வரும் வரை இடைநிறுத்திக்கொள்ளும் வகையில், நிதி செலுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், குறித்த இழப்புகளை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கு விடுத்த கோரிக்கைகளையும் பரீசிலிப்பதாக, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவை கோடிட்டு கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி சேவை, அந்த ஆணைக்குழுவின், உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிளித்த அவர், வழக்குகளை இடைநிறுத்துவதற்கு உரிய தொகையை ஆணைக்குழு நிர்ணயம் செய்து பிரதிவாதிகளுக்கு அறிவிக்கும் முறை இருப்பதாக குறிப்பிட்டார்.

இதன்மூலம் வழக்கொன்று 10 அல்லது 15 வருடங்களுக்கு நீண்டுச் செல்லும் என்ற அடிப்படையில், பிரதிவாதி, உரிய தொகையை செலுத்தி வழக்கை இடைநிறுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், இது குறித்த வழக்கை முழுமையாக இரத்து செய்யும் என்று அர்த்தமல்ல என்றும், பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழக்கை குறிப்பிட்ட காலத்துக்கு இடைநிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு மாத்திரமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், குறித்த காலப்பகுதிக்குள் குற்றம் சுமத்தப்பட்டவர் மீண்டும் தவறிழைத்தால் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், விசாரணையில் தவறு நடந்தமைக்கான ஆதாரம் கண்டறியப்பட்டால், நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்ய கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர் தெரிவித்தார்.

நிதி இழப்பை வட்டியுடன் செலுத்தினால், வழக்கில் செலவிடப்படும் நேரத்தையும் அதைத் தொடரத் தேவையான நிதியையும் சேமிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button