இலங்கை

ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள்

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன.

பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதம் ஒன்றின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதனை குறிப்பிட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.

அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 1998 ஆம் ஆம் ஆண்டு கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில், செம்மணியில் 300–400 உடல்கள் இராணுவ உத்தரவால் புதைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். எனினும், 1999 ஆம் ஆண்டு 15 உடல்கள் மட்டுமே தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது செம்மணியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன்,சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

அதேநேரம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன.

பிரித்தானியர்கள் 1948 ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது, அவர்கள் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர்.

அவர்கள் தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த கடிதம் மூலம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சந்தேகிக்கப்படும் புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை ஆதரித்தல், ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயத்தை நிறுவ அழுத்தம் கொடுத்தல், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, ஐ.நா.வின் கண்காணிப்பில் சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button