
சர்வதேச விசாரணையில் சாட்சிமளிக்க தயாரென கூறியுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு சிறையில் உயர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செம்மணி படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளி, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி. விஜேவிக்கிரம எழுதியுள்ள கடிதம், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அதன் பிரதிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அதில், சோமரத்ன ராஜபக்ஷ தமது சிறை அனுபவங்கள் மற்றும் கடந்த கால சாட்சியங்களின் அடிப்படையில், கொலைகளை செய்து சடலங்களை புதைக்க கட்டளை இட்ட அதிகாரிகளை அடையாளம் காட்டத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதை அவருடைய மனைவி பதிவு செய்துள்ளார்.
இது குறித்த தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமரத்ன ராஜபக்ஷவுக்கு சிறையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“சோமரத்ன கூறியவை புதிய தகவல்களல்ல. 1998-ஆம் ஆண்டிலேயே அவர் கூறியவை இன்று உண்மையென உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சடலங்களை புதைத்த ஒரே காரணத்தால் தண்டனை அனுபவிக்கும் நிலையில் உள்ளார். ஆனால், குற்றங்களை இழைத்த மேலதிகாரிகள் தப்பித்துள்ளனர்.
சோமரத்ன சுதந்திரமாக சர்வதேச விசாரணைக்கு சாட்சியம் அளிக்க விரும்புகிறார். ஆனால், அதற்கு முன் அவருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
சோமரத்ன தனது வாக்குமூலத்தில், 250 முதல் 300 பேர் வரை சித்திரவதையுடன் கொல்லப்பட்டனர்.
கொலை செய்தவர்கள் அதிகாரிகள்; ஆனால், தண்டனை அனுபவிப்பது நாங்கள் மட்டும்” என கூறியதாக அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெறும் குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார்.
ஆகவே, இதை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அனுரகுமார அரசாங்கம் முன் வர வேண்டும்.
சர்வதேச அழுத்தங்களை முறையாக தருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலம் முன் வர வேண்டும்.
இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுரகுமாரவும், வோல்கர் டர்க்கரும் உணர வேண்டும்.
அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று தாம் மீண்டும் கூறுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.





