தமிழீழம்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறைகள்.

யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட  பகுதியில்  கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

எனினும், 2023 ஜனவரி மாதம் முதல் மே மாத இறுதிவரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு கடந்த ஐந்து மாதங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையங்கள் முறையே யாழ்ப்பாணம் 06, சுன்னாகம் 14, மானிப்பாய் 04, கோப்பாய் 06, கொடிகாமம் 03, சாவகச்சேரி 06, பட்டுக்கோட்டை 05, ஊர்காவற்துறை 07  என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

18 வயதுக்குட்பட்டோரை அச்சுறுத்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல் மிரட்டுதல், சித்திரவதைக்குட்படுத்துதல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பாலியல் ரீதியான தொல்லை போன்ற வன்முறை சம்பவங்களாக இவை காணப்படுகின்றன.

வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் வன்முறை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலாக 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்களில் பதிவாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுடன் தொடர்புடையோர் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டநியதியின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்திற்கும் உரிய சட்டகோவைக்கு அமைய நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் முதல் அரையாண்டு பகுதிக்குள் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின்படி யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி வட்ஸ் அப் (whatsapp) குழுவினை உருவாக்கி மாணவர்களின் வரவு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவில் பகிர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய எதிர் விடயங்களை உறுதிப்படுத்தும் வேலை திட்டம் ஒன்றினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button