பெலின்சோனா (Bellinzona) நகரின் உள்ளூர் அரசியல் இயக்கமான “நோச்சே” (Il Noce), ஏப்ரலில் நடக்கும் தெசின் மாநிலத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடப் போகிறது.
கடந்த செப்டம்பரில் நகரில் ஒரு வாக்கெடுப்பு நடந்தது. நகரை “Fortezza” (கோட்டை) என்ற பெயரில் அழைப்பதற்கு எதிராக இந்த இயக்கம் போராடியது. வாக்காளர்கள் அவர்கள் பக்கம் நின்றார்கள். இந்த வெற்றிதான் மாநில அரசியலுக்குள் வரும் தைரியத்தைக் கொடுத்தது என்கிறார் இயக்கத் தலைவர் ப்ரென்னோ மார்ட்டினோனி (Brenno Martignoni).
மாநில அரசுக்கான (Consiglio di State) வேட்பாளர் பட்டியல் தயார். அதில் ஐந்து பேர் உள்ளனர். பாவ்லோ பால்ஸாரி, மிக்கேலா கிறிஸ்டன், ஒர்லாண்டோ தெல் தோன், மாரிலேனா ஃபோந்தேன் மகுல்லோ, ப்ரென்னோ மார்ட்டினோனி ஆகியோர். மாநிலப் பாராளுமன்றத்துக்கான (Gran Consiglio) பட்டியல் இன்னும் தயாராகவில்லை. எத்தனை பேர் வேண்டுமானாலும் நிற்கலாம், வெளியிலிருந்து வருபவர்களுக்கும் இடம் உண்டு என்று இயக்கம் சொல்கிறது. பெயர்கள் அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.
“கேட்பது, மதிப்பது, வெளிப்படையாக இருப்பது” என்பதே தங்கள் அடிப்படை என்கிறார்கள். தேர்தல் திட்டத்தில் 33 விஷயங்கள் உள்ளன. குடும்பமும் வேலையும் சமநிலையில் இருக்க உதவுவது, வன்முறையைத் தடுப்பது, எல்லோருக்கும் எட்டும் சேவைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
“HelvEthica” என்ற இன்னொரு குழுவோடு கூட்டணி அமைக்கும் பேச்சு முறிந்துவிட்டது. அதனால் தனியாகவே போட்டியிடுகிறார்கள். வியாழக்கிழமை பெலின்சோனா நகர நிர்வாகத்துக்குப் பதிவு அஞ்சலில் கடிதமும் அனுப்பியுள்ளனர். வாக்கெடுப்பை நடத்தியவர்களைச் சந்திக்க வேண்டும், “Fortezza” என்ற பெயரை விரைவாகக் கைவிட வேண்டும் என்பதே கோரிக்கை.
மூலம்: RSI
புகைப்படம்: Antonio Sessa / Unsplash





