லோசான் (Lausanne) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த போராட்டத்தின் முடிவில் கலவரம் ஏற்பட்டது. போலீஸ் சுமார் 100 பேரைப் பிடித்து வைத்தது. அவர்களில் 41 பேர் சிறுவர்கள்.
அரசு செலவுகளைக் குறைப்பதற்கு எதிராக நடந்த இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 5000 பேர் கலந்துகொண்டனர். ஊர்வலம் அமைதியாகவே நடந்தது. அது முடிந்த பிறகு, சுமார் 300 பேர் அனுமதி இல்லாமல் ரிபோன் (Riponne) பகுதி நோக்கித் தொடர்ந்து நடந்தனர். அவர்களில் சிலர் முகத்தை மூடியிருந்தனர்.
வோ மாநிலப் போலீஸ் (Police cantonale vaudoise) சொல்வது இது: போலீஸ் வேன் ஒன்று சேதமாக்கப்பட்டது. போலீசார் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள், வெடிகள் வீசப்பட்டன. அதனால் போலீசார் கண்ணீர்ப் புகை அடித்தனர். ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர். பிடிபட்ட அனைவர் மீதும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும்.
ஆனால் போலீஸ் நடந்துகொண்ட விதத்தை பல சாட்சிகள் குறை சொல்கிறார்கள். “20 Minutes” செய்தித்தாளிடம் பேசிய அவர்கள், அவெனியு டி எஷாலென் (avenue d’Échallens) பகுதியில் போலீஸ் மக்களைச் சுற்றி வளைத்ததாகச் சொல்கின்றனர். ஒரு பெண் தன் கட்டிடக் கதவுகளைத் திறந்து சுமார் 100 இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். புகையால் சிலருக்குக் கண் தெரியவில்லை. சிலரால் நடக்கவே முடியவில்லை என்று அவர் கூறினார்.
போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான குழுவும், போலீஸ் தலையிட்ட பிறகுதான் நிலைமை மோசமானது என்று சொல்கிறது. வோ மாநில அரசும் லோசான் நகரமும் போலீசார் மீதான வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.
மூலம்: Le Matin
புகைப்படம்: ev / Unsplash





