சுவிசின் வலே மாநிலத்தில் (Valais) உள்ள கொலொம்பே-முரா (Collombey-Muraz) ஊரில், 73 வயது சீஸ் தயாரிப்பாளர் ஒருவரை திருடர்கள் வீடு புகுந்து தாக்கினார்கள். இரண்டு நாள் கழித்து அவர் மாரடைப்பால் இறந்தார்.
இறந்தவர் லொரன் வியூ (Laurent Vieux). அந்தப் பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தவர். அவரது வீடு, அவரது சீஸ் நிறுவனத்தை ஒட்டியே இருக்கிறது. நவம்பர் 17, செவ்வாய் இரவு அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது திருடர்கள் உள்ளே புகுந்தார்கள். அவரை அடித்து, கை கால்களைக் கட்டிப்போட்டு, மூச்சுத் திணறடிக்கவும் முயன்றார்கள்.
கட்டுகளை அவிழ்த்த பிறகு, இரவு 11.20 மணிக்கு அவர் மகளுக்கு போன் செய்தார். பயந்துபோன குரலில் போலீசை அழைக்கச் சொன்னார். மகள் ஃபனி (Fanny Tornay-Vieux) இதை உள்ளூர் வானொலியில் சொன்னார். முகம் வீங்கிய நிலையில் அவர் ரென்னாஸ் (Rennaz) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மூக்கு, கன்ன எலும்புகள் உடைந்திருந்தன.
புதன் மதியம் அவர் வீட்டுக்குத் திரும்பினார். வியாழன் காலை குற்றப் புலனாய்வுப் போலீசைச் சந்திக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அப்போது அவர் இறந்து கிடந்தார்.
காயங்களுக்கும் மரணத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றே போலீசின் ஆரம்ப விசாரணை காட்டுகிறது. ஆனால் மகள் அப்படி நினைக்கவில்லை. அப்பாவுக்கு ஏற்கனவே இதய நோய் இருந்தது. தாக்குதலின் அதிர்ச்சியை அவர் இதயம் தாங்கவில்லை என்கிறார். குடும்ப நிறுவனத்தில் இப்போது எல்லோருக்கும் பயம். தனியாக இருக்கவே யாரும் துணிவதில்லை.
திருடர்கள் இன்னும் பிடிபடவில்லை. வலே மாநில போலீஸ் சாட்சிகளைத் தேடுகிறது. தகவல் தெரிந்தவர்கள் 027 326 56 56 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Elijah Austin / Unsplash





