சுவிஸில் சமீப நாட்களாக நிறைய மழை பெய்கிறது. ஆனாலும் சில பகுதிகளில் நிலத்தடி நீர் இன்னும் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
லூசேர்ன் மாநிலத்தில் (Luzern) உள்ள ஹோக்டோர்ஃப் (Hochdorf) நகராட்சி திங்கட்கிழமை புதிய கட்டுப்பாடு போட்டது. குழாய்த் தண்ணீரில் கார் கழுவக்கூடாது. அளவு எடுக்கத் தொடங்கியதிலிருந்து இவ்வளவு குறைவாக நிலத்தடி நீர் இருந்ததே இல்லை என்கிறார்கள்.
கிராபுண்டன் மாநிலத்தில் (Graubünden) உள்ள டோம்லெஷ்க் (Domleschg) நகராட்சி, ஃபெல்டிஸ் (Feldis) கிராமத்துக்கு லாரியில் குடிநீர் கொண்டு போகிறது. அடுத்த சில வாரங்களுக்கு அங்கே தண்ணீர் பற்றாக்குறை வரக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.
மழை பெய்தும் ஏன் இப்படி? சுவிஸ் அரசின் சுற்றுச்சூழல் அலுவலகத்தின் நீரியல் நிபுணர் விளக்குகிறார். பல இடங்களில் மண் இன்னும் வறண்டு கிடக்கிறது. மண் முதலில் தண்ணீரை நன்றாக உறிஞ்ச வேண்டும். அதன் பிறகுதான் தண்ணீர் நிலத்தடிக்குப் போகும். நிலத்தடி நீர் மீண்டும் உயர, வாரங்கள் அல்லது மாதங்கள் கூட தொடர்ந்து மழை பெய்ய வேண்டும்.
ஆழத்தில் தண்ணீர் இன்னும் இருக்கிறது. ஆனால் அதை எடுப்பதுதான் கடினம். சில இடங்களில் தண்ணீர் இறைக்கும் பம்ப் நிலையங்கள் விரைவில் வேலை செய்யாமல் போகலாம்.
பெரிய ஆறுகளின் ஓரத்தில் நிலத்தடி நீர் நிறைய இருக்கிறது. அங்கிருந்து பக்கத்துப் பள்ளத்தாக்குகளுக்குத் தண்ணீரைக் கொண்டு போகலாம். இதற்கு நகராட்சிகள் தங்கள் குழாய் இணைப்புகளை ஒன்றாக்கி, சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அடுத்த வறண்ட கோடை நிச்சயம் வரும் என்பதால், இன்னும் இணையாத நகராட்சிகள் பெரிய நீர் விநியோக அமைப்புகளில் சேர வேண்டும் என்கிறார்கள்.
மூலம்: SRF
புகைப்படம்: Thiva / Unsplash





