சுவிஸின் டிச்சினோ மாநிலத்தில் (Ticino) உள்ள பியாஸ்கா (Biasca) நகரில் கார் மோதிய 14 வயது சிறுவன் இறந்துவிட்டான். சனிக்கிழமை இரவு விபத்தில் சிக்கிய அவன், திங்கள்கிழமை மதியம் சூரிக் (Zurich) சிறுவர் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணிக்கு சிறுவன் சைக்கிளில் கிசான் வீதியில் (via Guisan) போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு கார் அவனை மோதியது. மோதிய வேகத்தில் அவன் பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டான். ஒரு பெண் அவசர உதவிக்கு அழைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அன்று மாலை அவன் இளைஞர்களுக்கான “மிட்நைட் ஸ்போர்ட்ஸ்” (MidnightSports) என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னார்வலராக உதவி செய்திருந்தான்.
காரை ஓட்டியவர் அந்தப் பகுதியில் வசிக்கும் 50 வயது இத்தாலியர். விபத்துக்குப் பிறகு அவர் நிற்காமல் போய்விட்டார். ஒரு சிறிய தெருவில் நிறுத்தியிருந்த இன்னொரு காரையும் மோதினார். அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் அவர் பிடிபட்டார்.
சிறுவன் இறந்ததால், அவர் மீது கவனக்குறைவால் உயிரைப் பறித்த குற்றச்சாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து விதி மீறல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன. அவர் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பது இன்னும் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.
மூலம்: RSI
புகைப்படம்: Ian Valerio / Unsplash





