ஒருவரை மயக்கமடையச் செய்யும் போதை மருந்து சொட்டுகளை (K.-o.-Tropfen) இனி நீண்ட நேரம் கண்டுபிடிக்க முடியும். சூரிக் பல்கலைக்கழக (Zürich) ஆய்வாளர்கள் இதற்கான புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை இந்த மருந்து (GHB) இரத்தத்தில் சில மணி நேரமும், சிறுநீரில் அதிகபட்சம் 12 மணி நேரமும் மட்டுமே தெரியும். புதிய முறையில் பெரும்பாலான சம்பவங்களில் இரண்டு நாட்கள் கழித்தும் கண்டுபிடிக்க முடிந்தது. சூரிக்கில் உள்ள தடயவியல் மருத்துவ நிலையம் இந்த முறையை இப்போதே பயன்படுத்துகிறது.
இது வழக்கு விசாரணைக்கு உதவும். “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்ற நிலை குறையும். ஆனாலும் இந்த மருத்துவ ஆதாரம் இல்லாமலும் தண்டனை கிடைக்க முடியும். பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும் சாட்சிகளும் போதும் என்று சட்டப் பேராசிரியர் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பெரிய ஆறுதல். முன்பு இரத்தப் பரிசோதனையில் எதுவும் தெரியாததால், “அதிகமாகக் குடித்திருப்பார்” என்று பழி விழுந்தது. என்ன நடந்தது என்றே தெரியாமல் இருப்பது மிகவும் வேதனையானது. ஆதாரம் இருந்தால் நடந்ததைப் புரிந்துகொள்ள முடியும். புகார் கொடுக்கவும் தைரியம் வரும் என்று பெண்களுக்கான உதவி மையத்தின் பொறுப்பாளர் சொல்கிறார்.
நினைவு இல்லாததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாதவர்களும் உதவி கேட்கலாம். சில மாநிலங்களில் “Forensic Nurses” என்ற சிறப்புத் தாதிகள் உள்ளனர். புகார் கொடுக்காமலேயே இவர்கள் தடயங்களைச் சேகரிப்பார்கள். புகார் கொடுக்கலாமா என்று முடிவு செய்யவும் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை மையங்கள் உதவும்.
மூலம்: SRF
புகைப்படம்: Testalize.me / Unsplash





