சுவிஸ் முழுவதும் வெள்ளிக்கிழமை மாலை “கதை சொல்லும் இரவு” (Notte del racconto) நடக்கிறது. பள்ளிகள், நூலகங்கள் உட்பட பல இடங்களில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கதைகள் வாசிக்கப்படும். இந்த ஆண்டின் தலைப்பு “குரல்கள்”.
வாசிக்கும் முறை காலத்துக்கு ஏற்ப மாறுகிறது. டிச்சினோ மாநிலத்தின் (Ticino) லூகானோவில் (Lugano) வசிக்கும் 26 வயது தெரேசா கியாரியாகோ அதற்கு ஓர் உதாரணம். புத்தகங்களைப் பற்றி யூடியூபில் வீடியோ போடுபவர் அவர். இரண்டரை ஆண்டுகளாக ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு வீடியோ போடுகிறார்.
நவம்பர் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் டிச்சினோ வாசகர்களுக்கு அழைப்பு விடுத்தார். எதிர்பார்த்ததை விட நிறைய பேர் பதில் சொன்னார்கள். அவர்களில் பத்து பேரை லூகானோவில் ஒரு கஃபேயில் சந்தித்தார். இளைஞர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை எல்லா வயதினரும் வந்தார்கள். வாசிப்பு இப்போது தனியாகச் செய்யும் விஷயம் மட்டுமில்லை என்கிறார் அவர்.
இன்னொரு பக்கம், “டார்க் ரொமான்ஸ்” (dark romance) என்ற வகை நாவல்கள் பதின்வயதுப் பெண்களிடம் பரவி வருகின்றன. இவற்றில் பாலியல் விஷயங்கள் அதிகம். மனநல சிகிச்சையாளர் ஆஞ்சலா நார்டெல்லா இதைப் பற்றி எச்சரிக்கிறார். இந்தக் கதைகள் நச்சுத்தனமான காதலை அழகாகக் காட்டுகின்றன என்கிறார். கட்டாயப்படுத்துவது, சம்மதம் இல்லாமல் நடப்பது, வன்முறையைச் சாதாரணமாகக் காட்டுவது எல்லாம் இவற்றில் இருக்கிறது. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று பெற்றோர் கவனிக்க வேண்டும் என்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு நாவல் தொடரைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இளைஞர்களே ஆன்லைனில் மனுக்கள் போட்டு அதை நிறுத்திவிட்டார்கள். இது ஒரு நல்ல அறிகுறி என்கிறார் நார்டெல்லா.
மூலம்: RSI
புகைப்படம்: Joel Muniz / Unsplash





