சுவிஸின் பியல் (Bienne) நகரில் ஒரு குடும்ப மருத்துவர், தன் நோயாளியிடம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தை மாற்றச் சொல்லியிருக்கிறார். காகித வேலையைக் குறைக்கத்தான் இப்படிச் சொன்னதாக அவர் கூறினார்.
நோயாளியின் பெயர் ஜெரால்ட் நிக்கோலே (Gérald Nicolet). அவர் அசுரா (Assura) நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். அசுராவின் மாதக் கட்டணம் சுவிஸில் மிகக் குறைவானவற்றில் ஒன்று. மருத்துவர் வார இறுதி நாட்களிலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான படிவங்களை நிரப்ப விரும்பவில்லை. நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றார். அந்த வேலை அதிகம் வருவது அசுராவால்தான் என்பது அவர் கருத்து.
அவருடைய மருத்துவ மையம் mediX bern என்ற மருத்துவர்கள் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த அமைப்புடன் ஒப்பந்தம் இல்லாத காப்பீட்டு நிறுவனங்களால் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகிறது என்று மையம் எழுதியிருக்கிறது. 2027 முதல், அவர்களின் சில கோரிக்கைகளை மையம் பார்க்காது. சிகிச்சைச் செலவை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்படுத்தல் அவற்றில் ஒன்று. அதனால் இந்த இலையுதிர் காலத்திலேயே, இந்த அமைப்புடன் இணைந்த நிறுவனத்தில் குடும்ப மருத்துவர் மாடலுக்கு மாறச் சொல்கிறது.
“காப்பீட்டு நிறுவனத்தையும் மாற்றினால்தான் குடும்ப மருத்துவரை வைத்துக்கொள்ள முடியுமா?” என்று நிக்கோலே கேட்கிறார். அசுரா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எல்லா மருத்துவர்களுக்கும் ஒரே சோதனை முறைதான், mediX மருத்துவர்களுக்கு தனியாக எதுவும் இல்லை என்கிறது. காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொருவருக்கும் சட்டப்படி உரிமை உண்டு என்றும், மருத்துவர்கள் அதைத் திணிக்கக் கூடாது என்றும் சொல்கிறது.
நிக்கோலே முடிவெடுத்துவிட்டார். அசுராவிலிருந்து விலகி, mediX உடன் இணைந்த ஹெல்சானா (Helsana) நிறுவனத்துக்கு மாறினார். மாதம் 143 பிராங்க் மிச்சமாகிறது. காலம் முழுக்கப் பார்த்த மருத்துவரை மாற்ற அவர் விரும்பவில்லை.
மூலம்: Le Matin
புகைப்படம்: National Cancer Institute / Unsplash





