பெர்ன் மாநிலத்தில் (Bern) உள்ள ப்ளாவ்ஸே (Blausee) சுற்றுச்சூழல் பாதிப்பு வழக்கில், முதல் முறையாக ஒருவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவர் பெர்னில் உள்ள ஒரு லாரி போக்குவரத்து நிறுவனத்தின் முதலாளி.
பெர்ன் மலைப்பகுதியில் (Berner Oberland) மித்ஹோல்ஸ் (Mitholz) என்ற கல் குவாரி இருக்கிறது. அங்கே பல ஆண்டுகளாக மாசடைந்த மண்ணும் கழிவுகளும் கொட்டப்பட்டதாக சந்தேகம். இது சரளைக்கல், கான்கிரீட் கழுவும் இடங்களிலிருந்து வந்த கழிவு.
அந்த முதலாளி தன் ஓட்டுநர்களிடம் சொல்லி இப்படிச் செய்ய வைத்தார் என்பது குற்றச்சாட்டு. அனுமதி பெற்ற குப்பைக் கிடங்கில் கொட்டாமல், இந்தக் குவாரியிலும் சுவிசின் மற்ற குவாரிகளிலும் கொட்டச் சொன்னாராம். ஓட்டுநர்கள் டெலிவரி சீட்டுகளைப் போலியாக எழுதி, அது சுத்தமான மண் என்று காட்டினார்களாம். மோசடி, சொத்து சேதம், நீர்ப் பாதுகாப்புச் சட்ட மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.
இந்தக் குவாரி குப்பைக் கிடங்கே இல்லை. சுத்தமான மண்ணை மட்டும்தான் கொட்டலாம். அது நீர்ப் பாதுகாப்புப் பகுதியில் இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ப்ளாவ்ஸே ஏரியும் மீன் பண்ணையும் அதற்குக் கீழே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில்தான். 2018 முதல் அங்கே ஆயிரக்கணக்கான ட்ரௌட் மீன்கள் செத்தன. மாசடைந்த மண்தான் காரணம் என்று ஏரியின் உரிமையாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் இன்றுவரை அது நிரூபிக்கப்படவில்லை.
தீர்ப்பு நவம்பர் 10 அன்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.
மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





