இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: சர்வதேச நிபுணத்துவம் இன்றியமையாதது – சுமந்திரன் வலியுறுத்தல்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு வேலைகள் மீண்டும் நடைபெறுகிற வேளையிலே, சர்வதேச நிபுணத்துவம் அங்கே கட்டாயம் இருக்க வேண்டும். இப்பொழுது ராஜ் சோமதேவவினால் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கை, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி அறிக்கை நாங்கள் முழுமையாகப் படித்து, அதற்கான ஒரு மறுப்பை கொடுக்க வேண்டும். ஏற்கனவே, பேராசிரியர் ராஜ் சோமதேவா இரண்டு இடைக்கால அறிக்கை இதற்கு முதல் கொடுத்திருக்கிறார். இப்பொழுது கொடுக்கப்பட்டது மூன்றாவது இடைக்கால அறிக்கை.

முதல் கொடுத்த இரண்டு அறிக்கையிலும் “மனிதப் புதைக்குழி” என்கின்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குற்றச் செயல்கள் இடம்பெற்றதற்கான தடயங்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஆகவே, மூன்றாவது இந்த இடைக்கால அறிக்கையிலே, அதற்கு மாறுபட்ட கருத்தை அவர் சொல்லியிருப்பதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், இதுவொரு இடைக்கால அறிக்கை; அதுவும் ஒரு தொல்லியல் நிபுணருடைய இடைக்கால அறிக்கை. ஆகையினாலே, நாங்கள் ஏற்கனவே சொன்னதைப் போல, இந்த நிலையிலேயே சர்வதேச நிபுணத்துவம் தேவையாக இருக்கிறது. சர்வதேச மேற்பார்வை இல்லாமல், செய்யப்படுகிற இந்த அகழ்வாராய்ச்சியிலே, ஒருவர் இப்படியான ஒரு அறிக்கையைக் கொடுத்து விடுவது, மிகவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

ஆகவே, திரும்பவும், இந்த அகழ்வு வேலைகள் நடைபெறுகிற வேளையிலேயே, சர்வதேச நிபுணத்துவம் அங்கே கட்டாயம் இருக்க வேண்டும். இப்பொழுது கொடுக்கப்பட்ட இந்த அறிக்கை, அதன் முக்கித்துவத்தையும் வலியுறுத்துகிறது.

ஆனால், அறிக்கையில் இருக்கிற முரண்பாடான கருத்துக்கள், அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் பல இருக்கின்றன. அது குறித்து, வருகிற நாட்களிலே நாங்கள் சில நடவடிக்கைகள் எடுப்போம். நான் ஏற்கனவே நீதிமன்றத்திலே ஆஜராகி இது சம்பந்தமான பல விடயங்களை முன்வைத்திருக்கிற காரணத்தினாலே, அடுத்த நீதிமன்றத் தவணையிலே அதனைச் செய்வதாக உத்தேசிக்கிறேன் – என்றார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button