
நேர்வேக்குச் சென்றுள்ள இலங்கை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபவிருத்தி அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்கவுக்கும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சருமான கம்சாயினி குணரத்தினத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று ஒஸ்லோவில் நடைபெற்றுள்ளது.
நேற்று (17) சனிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் கம்சாயினி குணரத்தினம் தெரிவிக்கையில்,
பச்சை வலுச்சக்தி மாற்றம், சமூகச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் மற்றும் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழும் மக்களின் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த எங்களது கூட்டு லட்சியங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு இதுவொரு சிறந்த சந்திப்பாக அமைந்தது.
கடந்த ஆண்டில் இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 2,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் என்னிடம் தெரிவித்தார். அவர்களில் பலர் இளைஞர்களாவர் என்றும் குறிப்பிட்டார்.
இதைக் கேட்பதற்கு மிகவும் மனவேதனையாக இருந்தது. வீதிப் பாதுகாப்பு என்பது மனித உயிர்கள், குடும்பங்கள் எதிர்காலம் சார்ந்தது என்பதையும், அவை ஒருபோதும் மறக்கப்பட முடியாதவை என்பதையும் இது நமக்கு வலுவாக நினைவூட்டுகிறது.
எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான மற்றொரு விடயமான சமூக, இன மற்றும் புவியியல் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினோம். குறிப்பாக, உள்நாட்டுப் போரின் வடுக்கள் சமூகத்தை இன்னமும் பாதித்து வரும் இலங்கை போன்றவொரு நாட்டில் இது மிகவும் அவசியமானதாகும்.
சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அவர்களின் முக்கிய பணிக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
காலநிலைமாற்றம் மற்றும் போக்குவரத்து சவால்களுக்குத் தீர்வு காண்பது மட்டுமன்றி, சமூகச் சவால்களுக்கும் தீர்வளிக்கும் வகையிலான உட்கட்டமைப்பை அவர்கள் கட்டியெழுப்புவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.





