
யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் காலம் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஒக்டோபர் 12ஆம் திகதி வெளியிடப்பட்ட விமானப் பாதுகாப்பு அறிவிப்பில், ஒக்டோபர் 17ஆம் திகதி இரவு 9 மணி GMT வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சவுதி நேரப்படி ஒக்டோபர் 18ஆம் திகதி நள்ளிரவாகும்.
விமான நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுகளை நிறைவு செய்து, மீண்டும் விமானச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மூடல் நீடிக்கப்பட்டுள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 10ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மறுநாள் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ரியாத் நகருக்கான சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ள நிலையில், ஜெட்டா உள்ளிட்ட சவுதியின் ஏனைய விமான நிலையங்கள் ஊடான சேவைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனமான Cirium வெளியிட்ட தரவுகளின்படி, சவுதி அரேபிய விமான நிலையங்களில் விமானச் சேவை ரத்துச் செய்யப்பட்ட விகிதம் 46.4 சதவீதத்தை எட்டியுள்ளது.





