
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தூண்டும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கிலேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பு புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2025 ஜனவரி 9ஆம் தேதி, குறித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு 9 மாத எளிய சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரர், புதன்கிழமை விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்த மனு 2027 பெப்ரவரி 23ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் அடுத்த விசாரணையை 2027 பெப்ரவரி 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் ஞானசார தேரரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





