
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி, கொழும்பில் இன்று விசேட கவனயீர்ப்பு மற்றும் உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அனோஜனுக்கு கருணை காட்டி மரண தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு சவூதி அரசையும் சவூதி மன்னரையும் வலியுறுத்துவதே போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அதேவேளை, அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கும், தமிழ், முஸ்லிம் மற்றும் பௌத்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம், அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் மனிதாபிமான போராட்டத்தில் கட்சி, மதம் மற்றும் இன வேறுபாடுகளை மறந்து கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புகள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் கையெழுத்துகளுடன் கூடிய மகஜர், இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட தரப்புகளிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





