சுவிஸ்

இஸ்ரேலுக்கு எதிராக தடைகள் விதிக்க ஜெனீவா ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக இராணுவம், எரிசக்தி மற்றும் வர்த்தகத் தடைகளை சுவிட்சர்லாந்து விதிக்க வேண்டும் எனக் கோரி Collectif Urgence Palestine என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 

இதில் , சுமார் 1,500 பேர் கலந்துகொண்டு, பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தனர். பாலஸ்தீனப் பகுதிகளில் இடம்பெறுவதாகக் கூறப்படும் “இனச் சுத்திகரிப்பு” நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டன. இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபை பலமுறை எச்சரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியதுடன் “சுவிட்சர்லாந்தும் உடந்தை” உள்ளிட்ட வாசகங்கள் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றன.

ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது.

காஸா பகுதியில் பட்டினியை போருக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் நடவடிக்கைகளையும், அங்கு ஏற்பட்டுள்ள பெருமளவிலான உயிரிழப்புகள் மற்றும் காயங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தாலும் கண்டிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் நடவடிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் விமர்சிக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக பெர்ன் அரசு இந்த விவகாரத்தில் செயலற்ற நிலையில் இருந்ததாக அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றம்சாட்டினர்.

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக, அறிவியல் மற்றும் கலாசார உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும், இராணுவ ஒத்துழைப்பை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். இதனிடையே, சுவிட்சர்லாந்து இஸ்ரேலுடன் ட்ரோன் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அல்லது முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கலாந்த்சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், இந்த அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைகளுக்காக சுவிட்சர்லாந்துக்கு வந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாது என பெர்ன் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை சுவிஸ் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் Collectif Urgence Palestine கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button