இலங்கை

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பாரிய மோசடி: முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் கைது!

இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்றும், கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றியவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர், பாதிக்கப்பட்ட நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து, தனக்குள்ள செல்வாக்கைக் காட்டி நம்பவைக்கும் வகையில் நடந்து கொண்டு இந்த மோசடியைச் செய்துள்ளார் என்பதும் விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காகப் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நீண்டகாலமாக இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button