
மட்டக்களப்பு:
மகாத்மா காந்தியடிகளின் 157வது பிறந்தநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு நகர் காந்திப் பூங்கா வளாகத்திலுள்ள காந்தியின் திருவுருவ நினைவுத் தூபியில் சிறப்பு நினைவு நிகழ்வுகள் நேற்று (02.10.2026) நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் திரு. அ. செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வின் தொடக்கமாக மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தால் தயாரித்து வெளியிடப்பட்ட “காந்தீயம்” எனும் சிறப்பு மலர் அங்கு வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






