
லலித் ரத்நாயக்க இயக்கிய திரைப்படம் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
99ஆவது ஒஸ்கார் விருது விழாவின் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இலங்கையின் உத்தியோகபூர்வ திரைப்படமாக லலித் ரத்நாயக்க இயக்கிய ‘Riverstone’ திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹாதிவுல்வெவ இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கான தேசிய ஒஸ்கார் தெரிவுக்குழுவின் தலைவராகவும் செயற்படும் அவர், ஒஸ்கார் விருதுகளுக்கான புதிய ஒழுங்குபடுத்தப்பட்ட தெரிவு நடைமுறையின் கீழ் இந்தத் திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி, உள்ளூர் தெரிவுக்குழுவின் அங்கீகாரம் மற்றும் அதன் உறுப்பினர்களின் தொழில்சார் தகுதிகள் உள்ளிட்ட ஒஸ்கார் விருதுகள் அகாடமியின் நிபந்தனைகள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இத்தகைய நடைமுறையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட திரைப்படமொன்று இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டார்.
ஆறு திரைப்படங்கள் பரிசீலனை
இலங்கையின் தேசிய ஒஸ்கார் தெரிவுக்குழுவில் திரைப்படத்துறையின் அனுபவமிக்க கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இயக்குநர்களான அசோக ஹந்தகம, ரவீந்திர குருகே, அனோமா ராஜகருணா, விசாகேச சந்திரசேகரம், திரைப்பட விமர்சகர் அருண குணரத்ன, இசையமைப்பாளர் லக்ஷ்மன் ஜோசப் டி சேரம் மற்றும் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் உதித லக்மால் கஹந்தவாராச்சி ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்.
இக்குழுவினால் ஐந்து சிங்கள மொழித் திரைப்படங்கள் மற்றும் ஒரு தமிழ் மொழித் திரைப்படம் உள்ளிட்ட ஆறு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டன.
அவை வருமாறு:
-
விஹங்க பிரேமய (Vihanga Premaya – Peacock Lament) – சஞ்சீவ புஷ்பகுமார தயாரித்து இயக்கிய திரைப்படம்.
-
ஆயு (Ayu) – சத்ர வீரமன் இயக்கத்தில், யசஸ் ரத்நாயக்க தயாரித்த திரைப்படம்.
-
ஃபாதர் (Father) – சாந்த கீததேவ தயாரிப்பில், சமிந்த ஜயசூரிய இயக்கிய திரைப்படம்.
-
அந்தோனி (Anthony) – ராமதாஸ் சுகந்தினி மற்றும் ராமதாஸ் சத்யராஜா தயாரிப்பில், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வரன் இயக்கிய திரைப்படம்.
-
ரிவர்ஸ்டோன் (Riverstone) – பிரபாத் ரொஷான் மற்றும் நிமந்தி பொரகே தயாரிப்பில், லலித் ரத்நாயக்க இயக்கிய திரைப்படம்.
-
கிரிக்கெட் சாது (Cricket Sadu) – தில்ஷார ஜயமான்ன இயக்கத்தில், ரஸித ஜினசேன தயாரித்த திரைப்படம்.
இறுதிச் சுற்றில் ‘Riverstone’ மற்றும் ‘Father’
பரிசீலிக்கப்பட்ட ஆறு திரைப்படங்களில் நான்கு திரைப்படங்கள் ஒஸ்கார் அகாடமியின் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்ததாக தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ‘Riverstone’ மற்றும் ‘Father’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன.
இறுதியில், 99ஆவது ஒஸ்கார் விருதுகளுக்கான சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இலங்கையின் உத்தியோகபூர்வ சமர்ப்பிப்பாக ‘Riverstone’ திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.





