சர்வதேசம்தமிழீழம்

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை! பிரித்தானிய எம்.பி. கோரிக்கை

பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ், லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்தக் கோரி மனுவொன்றை ஆரம்பித்துள்ளார்.

வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாசாரத் தொடர்புகளைக் கொண்டுள்ள பிரித்தானியத் தமிழர்களின் பயண வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மனு முன்வைக்கப்பட்டுள்ளது.

“Bring Direct Flights to Jaffna” (யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவையை கொண்டு வாருங்கள்) என்ற தலைப்பில் இந்த மனு வெளியிடப்பட்டுள்ளது.

திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமய விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களையும் மனு சுட்டிக்காட்டுகிறது.

Harrow West தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கரேத் தோமஸ், தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள் கொழும்பு வழியாக சென்று, அங்கிருந்து மேலும் சுமார் 400 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் இந்த மேலதிக பயணம், வீதி அல்லது ரயில் மூலம் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை எடுப்பதாகவும், குறிப்பாக வயதானவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்காகச் செல்பவர்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்படும் நேரடி விமான சேவை மூலம் பயண நேரத்தைக் குறைத்தல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல் மற்றும் பிரித்தானியாவுக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையிலான குடும்ப, கலாசார மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமான சேவை வடக்கு மாகாணத்தின் சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும்பயனளிக்கக்கூடும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து ஆதரிப்பதற்காக பிரித்தானிய அரசாங்கம், இலங்கை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என கரேத் தோமஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பொதுமக்களும் மனுவில் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button