
உலகின் பல நாடுகளிலும் உள்ள பாதுகாப்புப் படையினரால் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச காணாமற்போனோர் தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட “கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்த வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இணைந்து இலங்கையில் வவுனியாவில் கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பன்னாட்டு காணாமற்போனோர் நாள் நிகழ்வும், ஆர்ப்பாட்டமும் மேற்கொண்டிருந்தனர்.
இலங்கையில் குறிப்பாக உள்நாட்டு போர் இடம்பெற்ற ஈழத்தில் யுத்தகாலத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் ஆயிரக் கணக்கானவர்கள் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற வெவ்வேறு கலவரங்களின் போதும் அதிக எண்ணிக்கையானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இலங்கை இராணுவத்திடம் கையளித்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதுடன் பல்வேறு வழிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்களுக்கு என்னானது என்பது குறித்து அறிவிக்குமாறு ஈழத்தில் வடக்கு, கிழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறன.
உள்நாட்டில் இலங்கை அரசால் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு பல காலங்கள் கடந்தும் தீர்வு கிடைக்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டதால் உள்நாட்டு விசாரணையை நம்பி ஏமாந்த மக்கள் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென தற்போது வலியுறுத்திவருகின்றனர்.
ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் ஒவ்வொரு விசாரணை குழுக்கள் ஆரம்பிக்கப்படுவதும் காலத்தை இழுத்தடிப்பதாகவும் குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தை (OMP) அமைத்து, உறவுகளுக்கு என்ன நடந்தது என்று விசாரிப்பதை விடுத்து இழப்பீடு மற்றும் மரணச்சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை அரசு செய்துவருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிவந்த குறப்பாக தாய் தந்தையர்கள் சுமார் 500 பேர் வரையில் நீதியே கிடைக்காமல் இறந்து போயுள்ளனர்.இறந்தவர்களுக்கும் நீதி வேண்டியே ஈழத்தில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேசமும் இழுத்தடிப்பு செய்கின்றதா என்ற கேள்வியுடன் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது அதில் பேரணி, புத்தகவெளியீடு,கண்காட்சி என்பன இடம்பெறவுள்ளது. இதில் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொள்கின்றனர். அத்துடன் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறுகிறது.இதேவேளை புலம்பெயர் தேசங்களிலும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி தேடி இன்றும் மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த மக்களுக்கு ஆதரவாக நாமும் இணைந்து நிற்கிறோம்





