
சுவிற்சர்லாந்தில் தமிழ்ப் பெண் மனுஷா மக்கள்அன்பனுக்கு உயரிய விருது: ‘சிறந்த விளையாட்டு வீராங்கனை 2026’ பட்டம் வென்று சாதனை!சுவிற்சர்லாந்தின் Brunnen-Ingenbohl நகராட்சியால் வழங்கப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான “சிறந்த விளையாட்டு வீராங்கனை” (Sportlerin des Jahres 2026) விருதை, பரதநாட்டியக் கலைஞர் மனுஷா மக்கள்அன்பன் (Manusha Makkalanpan) வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை 31, 2026 அன்று நடைபெற்ற விழாவில் இவருக்கு இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சாதனைகளின் பின்னணி: கடந்த சில ஆண்டுகளாகப் பரதநாட்டியக் கலையில் இவர் படைத்து வரும் மகத்தான சாதனைகளுக்காகவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பிற்காகவும் இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது.
சுவிற்சர்லாந்து நாட்டைத் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் பிரதிநிதித்துவப்படுத்திய மனுஷா, பிரிட்டனின் பார்மிங்ஹாம் (Birmingham) மற்றும் ஸ்பெயினின் சான் செபாஸ்டியன் (San Sebastián) ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலக மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளைக் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நன்றியும் மகிழ்ச்சியும்:
தனக்குக் கிடைத்த இந்த உயரிய விருது குறித்துப் பேசிய மாணவி மனுஷா: “நான் மிகவும் விரும்பும் பரதநாட்டியக் கலையின் மூலமாகச் சர்வதேச அரங்கில் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது உழைப்பும் சாதனைகளும் பாராட்டப்பட்டது மிகவும் நெகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதை வழங்கி கௌரவித்த Brunnen-Ingenbohl நகராட்சிக்கும், IBS Sportverein அமைப்பின் தலைவர் பிர்மின் கைஸர் (Pirmin Geisser) அவர்களுக்கும், IBS Sportverein அமைப்பிற்கும் மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” எனத் தெரிவித்துள்ளார்.
பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தின் மூலம் சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து, சுவிட்சர்லாந்தில் ‘சிறந்த விளையாட்டு வீராங்கனை’ விருதைப் பெற்றுள்ள மனுஷா மக்கள்அன்பனுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.





