
சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெண்டி, தற்போது எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், இலங்கையில் அது எதிர்பார்த்ததை விட முன்னதாகவே, நவம்பர் மாதத்திற்குள் உச்சநிலையை அடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
எல் நினோவின் தாக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடுமையான வறட்சி நிலவும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல; உலகளாவிய சுற்றுச்சூழல் சவாலாக இருப்பதால், அதனை எதிர்கொள்ள அரச நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கடுமையான வறட்சி ஏற்படும் சாத்தியம் இருப்பதால், மின்சாரத்தையும் நீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறுபொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். எல் நினோவின் தாக்கம் வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார பாதிப்பு மற்றும் பொதுச் சுகாதாரச் சீர்கேடு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன கூறுகையில், எல் நினோ தற்போது உலகளவில் மிதமான (Moderate) நிலையை எட்டியுள்ளதுடன், அது தொடர்ந்து வலுப்பெற்று மிக வலுவான நிலையை அடையக்கூடும் என்றார்.
பொதுவாக எல் நினோ 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும், அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் வறட்சியும் கனமழையும் மாறி மாறி ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார்.
மேற்கு, சபரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பிற பகுதிகளில் வறட்சியும் வெப்பநிலை அதிகரிப்பும் நிலவக்கூடும் என்றார்.
செப்டம்பர் இறுதிப் பகுதியில் சில பகுதிகளில் மழை தொடங்கும் என்றும், அக்டோபர் மாதம் முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆண்டின் இறுதி மாதங்களில் வெள்ளப்பெருக்கு அபாயமும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





