
திருகோணமலை:
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான நிலத்தில், திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் உத்தரவையும் அப்பகுதி தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி பௌத்த சைத்திய (விகாரை) கட்டுவதற்கான அடிக்கல் இன்று (22) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.


மேல் நீதிமன்ற உத்தரவும் வழக்க பின்னணியும்:
கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய காணியில் பௌத்த ஆக்கிரமிப்பு இடம்பெறுவதாக எழுந்த எதிர்ப்பையடுத்து, ஆலய தர்மகர்த்தா திருமதி கோகிலரமணி என்பவரால் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனையின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது (வழக்கு இலக்கம்: HCT/writ/590/2019).
குறித்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம், “கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியாது” என மிகத் தெளிவாக இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.







அதிகாரிகளின் பங்களிப்புடன் நடந்த அடிக்கல் நாட்டு விழா:
நீதிமன்றத் தடை உத்தரவு அமுலிலுள்ள நிலையிலும், தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வில்கம் விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்சதிஸ்ஸ தேரரின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.எம்.ஹேமந்த குமார மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.யூ.சுரங்க பெரேரா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர்.
அரச தரப்பின் முரண்பாடான நிலைப்பாடு:
முன்னதாக, அப்பகுதியில் விகாரை கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகள் மற்றும் செங்கற்கள் இறக்கப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, உப்புவெளி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஆகியோர் இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அரச தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரச தரப்பில், “பௌத்த கட்டுமானம் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை; புதிய கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது, சிதைவடைந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை மீறி இன்றைய தினம் பகிரங்கமாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
வலுக்கும் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள்:
புதிய அரசு ஆட்சியில் உள்ள நிலையிலும், “மாற்றம்” என்ற வாக்குறுதிக்கு மாறாக முந்தைய ஆட்சிக் காலங்களைப் போலவே சிறுபான்மை மக்களின் வரலாற்றுச் சான்றுகளையும் நிலங்களையும் தொல்லியல் என்ற பெயரில் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்குவதாக தமிழ் அமைப்புகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்க அதிகாரிகளே மதிக்காமல் செயல்படுவது சட்டத்தின் ஆட்சிக்கும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனிடையே, இன்று இடம்பெற்ற சட்டவிரோத அடிக்கல் நாட்டு நிகழ்வையும் மேல் நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டமையையும் சுட்டிக்காட்டி, ஆலய தர்மகர்த்தா திருமதி கோகிலரமணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக மீண்டும் திருகோணமலை மேல் நீதிமன்றில் புதிய வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
#KanniyaHotSprings
#KanniyaPillayarKovil
#Trincomalee #Trinco #SaveKanniya #KanniyaIssue #TamilHeritage
#RuleOfLawLK #SystemChangeLK
#SriLankaPolitics #AnuraKumaraDissanayake #AKD #NPPGovt #ArcheologyOrLandGrab
#JusticeForTamils #NorthernEasternTamils
#Kanniya #SaveKanniya #TamilHeritage #SriLanka #ViduthalaiFM #SwissTamilInfo #SwissTamil #திருகோணமலை #கன்னியா #சுவிஸ்தமிழர்தகவல்மையம்





