
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் “லிட்டில் ஃபயர்” எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது.
கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.

லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன் சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 180-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் செயலில் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளன. ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு காட்டுத்தீயால் 7,250 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
இது ஒன்டாரியோவில் இதற்கு முன் எந்த ஆண்டிலும் பதிவாகாத அளவுக்கு அதிகமான பாதிப்பாகக் கருதப்படுகிறது.
அதிகப்படியான தீப்பரவல்கள் கடந்த 10 நாட்களுக்குள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேற்றப்பட்ட 13 சமூகங்களில் 12 சமூகங்கள் பழங்குடியின சமூகங்கள் வாழும் பகுதிகளாகும். இந்த சமூகங்கள் தீவிர பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினத் தலைவர்கள் ஒன்டாரியோ அரசின் காட்டுத்தீ மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள், அவசர வெளியேற்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்டு (Doug Ford), காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தனது அரசு முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.





