இலங்கை

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு $715 மில்லியன் பணப் பரிமாற்றம்; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட CID

இலங்கையில் 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரை, போலியான இறக்குமதி பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ.214.7 பில்லியன்) வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

CID-யின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, அரசுப் பணவியல் குழு (COPF)முன் ஆஜராகி இதனை வெளியிட்டார்.

அவரது விளக்கத்தின்படி, இலங்கை சுங்கத் திணைக்களம் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையில், 105 நிறுவனங்கள் மூலம் 24,300-க்கும் மேற்பட்ட டெலிகிராபிக் பணப்பரிமாற்றங்கள் (TT) மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதற்கான பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் 105 நிறுவனங்கள், 55 நபர்கள் மற்றும் 227 வங்கி கணக்குகள் தொடர்புடையதாக CID தெரிவித்துள்ளது.

மேலும், போலியான விலைப்பட்டியல்கள் (Invoices) மற்றும் போலி சுங்க ஆவணங்கள் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 13 அரச மற்றும் தனியார் வங்கிகளும் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

43 நிறுவனங்கள் மூலம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கரவிட்ட தெரிவித்தார்.

மேலும், இந்த வலையமைப்பு துபாயை மையமாகக் கொண்டு இயங்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை (Money Laundering) கும்பலுடன் தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக CID கூறியுள்ளது.

இதனுடன் தொடர்புடைய இரு முக்கிய சந்தேகநபர்கள், இன்டர்போல் (INTERPOL) உதவியுடன் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற மற்றும் பணச் சலவை வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை CID-யின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவும் (Financial Crimes Investigation Division) மற்றும் குற்ற வருவாய் புலனாய்வு பிரிவும் (Proceeds of Crime Investigation Division) தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button