
ஸ்பெயின் உலகக் கோப்பை கால்பந்து வெற்றியைக் கொண்டாடியபோது, நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரில் நீரூற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அவசரகால சேவைகள் தெரிவித்ததாவது, ஸ்பெயின் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, Árbol Gordo நீரூற்று அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்ற நிலையில், அதன் மேடையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த 13 வயது சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அவசரகால மீட்புப் படையினர், பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுக்கள் விரைந்து சென்றனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக சியுடாட் ரோட்ரிகோ நகர சபை இரங்கல் தெரிவித்ததுடன், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் நகராட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நீரூற்று இடிந்து விழுந்தமைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





