
இலங்கை மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நேற்று (16) நடத்தப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், 4 பொதுப் போக்குவரத்து சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் இதனை வழிநடத்தியதுடன், டாக்டர் என்.ஏ. அபேசேகர தலைமையிலான மருத்துவக் குழு, நிறுவனத்தின் நடமாடும் ஆய்வகப் பேருந்தில் பரிசோதனைகளை மேற்கொண்டது.
காலை நடைபெற்ற இந்த நடவடிக்கையில் சுமார் 150 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பொதுப் போக்குவரத்து துறையில் ஒழுக்கமான, போதைப்பொருள் இல்லாத பணியாளர்களை உருவாக்கும் நாடளாவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சாலை விபத்துகளை குறைப்பதுடன், சாரதிகளிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு நிறுவன விதிமுறைகளின் கீழ் அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கைகளும், நாட்டின் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்தத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை உருவாக்கும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.





