இலங்கை

இலங்கையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை! வெளிநாட்டிலிருந்து ஆட்சேர்க்க நடவடிக்கை

பிரதி அமைச்சரின் அதிரடிக் கருத்து

இலங்கையின் கட்டுமானத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், திறன் வாய்ந்த தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கட்டுமானத்துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மின்சாரப் பணியாளர்கள், வெல்டிங் நிபுணர்கள் உள்ளிட்ட திறன் வாய்ந்த தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது தற்போது மிகவும் கடினமாகியுள்ளது என்றார். அதிகரித்து வரும் தேவையால், பலர் வாரக்கணக்கில் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக கொழும்பு நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு கட்டுமானத் துறை வேகமாக விரிவடைந்து வருகிறதுஎன்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் நாட்டுக்கு மேலதிகமாக 10,000-க்கும் அதிகமான திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் மதிப்பிட்டார்.

இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கான திறன் வாய்ந்த தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பது அமைச்சின் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், பயிற்சியை நிறைவு செய்த பலர் தென் கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதால், நாட்டில் திறன் வாய்ந்த தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“உள்நாட்டில் தேவையான அளவு திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க முடியாவிட்டால், வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வர வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்” என்றும் அவர் கூறினார்.

மேலும், தெற்காசியாவில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது என்றும், நாட்டின் விரைவான அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகளின் அதிகரிப்பே திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான தேவை உயர்வதற்கான முக்கிய காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button